வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (17:30 IST)

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன்வராத அதிகாரிகள் டாஸ்மாக் கடையை திறக்க துடிப்பதேன்?

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் 35-வது வார்டு எம்எஸ்கே நகரில் புதிதாக தொடங்க இருக்கும் அரசு மது பானக் கடை அமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் மதுபானக் கடைக்கான கட்டடம் கட்ட தொடங்கினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜிடம் மனு அளித்தனர். இதை விசாரித்த ஆட்சியர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் கண்டீப் பாக டாஸ்மாக் கடை வராது. மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.


இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் திட்டமிட்டபடி அதே இடத்தில் மதுபானக் கடை அமைக்க ஏற்பாடு செய்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், எம்எஸ்கே நகரில் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் சாலை வசதிகள் கேட்டு பல முறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் டாஸ்மாக் கடையை திறக்க மட்டும் அதிகாரிகள் துடியாய் துடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். மேலும் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சம் மட்டுமே மக்கள் மத்தியில் உள்ளது. எனவே இப்பகுதியல் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்றனர்.

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அந்த இடத்தில் மதுபானக் கடை அமைக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவையும் மீறி அந்த பகுதியில் மதுபானக்கடை அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


கரூர் சி.ஆனந்தகுமார்