1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (18:29 IST)

டாஸ்மாக்கில் பீர் விலை உயர்கிறது - குடிமகன்கள் கலக்கம்

தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக்கில் பீர் விலையை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
தமிழக அரசுக்கு வருவாய் கொடுப்பதில் முக்கியமாக திகழ்கிறது டாஸ்மாக். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மற்றும் பார்கள் மூலம் வருடத்திற்கு ரூ.22 ஆயிரம் கோடி வருமானம்  அரசுக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது.

அந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஆயிரத்திற்கும் அதிகமாக டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டன. இதனால், டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்து தமிழக அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, அதை சரிக்கட்ட பிராந்தி, ரம், ஓட்கா உள்ளிட மது வகைகளின் விலை சில மாதங்களுக்கு முன்பு சற்று உயர்த்தப்பட்டது.
 
இந்நிலையில், தற்போது பீர் விலையை உயர்த்தவும் டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அநேகமாக ஒரு பீர் பாட்டிலின் விலை ரூ.10 அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் எனத் தெரிகிறது.
 
ஏற்கனவே, டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.5 முதல் ரூ.20 வரை குடிமகன்களிடம் வசூலிக்கிறார்கள். மேலும், கம்ப்யூட்டர் பில் முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், முறையாக பில் தருவதில்லை. இதில், மேலும் ரூ.10 அதிகரித்தால் என்ன செய்வது என குடிமகன்கள் குமுறுகிறார்கள்.