தமிழகத்தில் 32 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்: அமைச்சரின் பேச்சால் பரபரப்பு
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாகவும் எம்.எல்.ஏக்கள் உயிரிழப்பு மற்றும் நீதிமன்ற தீர்ப்பு காரணமாகவும் மொத்தம் 22 தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடந்து வரும் நிலையில் ஸ்டாலின் நிதானமாக இல்லாவிட்டால் இன்னும் 32 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு வந்தது தொடர்பாக திமுகவின் 21 எம்.எல்.ஏக்கள் மீதும் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக ஸ்டாலின் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதும், ஆக மொத்தம் 32 எம்.எல்.ஏக்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் மீண்டும் 32 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பேட்டி ஒன்றில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். எனவே ஸ்டாலின் நிதானமாக நடந்து கொண்டால் அவர் உள்பட அவரது கட்சியின் 32 எம்.எல்.ஏக்களுக்கு நல்லது என்றும் அவர் அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்காவை எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு கொண்டு சென்றது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்த வழக்கு சுறுசுறுப்பாகும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.