பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!
ரஜினிகாந்த் மற்றும் சீமான் சந்திப்பு குறித்து ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரையில் பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைய இருப்பதாகவும் அதற்கு ரஜினி ஆதரவு தர இருப்பதாகவும் பாஜக - நாம் தமிழர் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சீமான் என்று அறிவிக்கப்பட இருப்பதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் சீமான் சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த நிலையில், இந்த சந்திப்பில் சினிமா அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த வார ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரையில் பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைய தயாராக இருப்பதாகவும், ஆனால் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சீமான் நிபந்தனை விதித்ததாகவும் இது குறித்து பாஜக மேலிட தலைவர்களிடம் பேசுகிறேன் என்று ரஜினி வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்பட்டது.
இரு கட்சிகளுக்கும் இடையே சில கொள்கை வேறுபாடு இருந்தாலும், தமிழ் தேசியம் மற்றும் இந்திய தேசியம் என்ற கொள்கையில் ஒற்றுமை இருப்பதாகவும் எனவே இந்த கூட்டணி சரியாக இருக்கும் என்று ரஜினியிடம் சீமான் விளக்கம் அளித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக - நாம் தமிழர் கூட்டணி ஏற்படுமா? அண்ணாமலையை தவிர்த்து விட்டு சீமானை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்களா? ரஜினியின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva