ஐடி ஊழியரை தாக்கி செயின் கொள்ளை! திமுக, பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது!
மதுரை பரசுராம்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (22) என்ற ஐடி நிறுவன ஊழியர் நேற்று இரவு தனது நண்பருடன் பைக்கில் சென்று சர்வேயர்காலனி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.
அப்போது ஹரிஹரசுதனின் பைக்கிற்கு பின்னால் வந்த கே.புதூரை சேர்ந்த முகமது ஆசிக் (23) என்பவர் ஹரிஹர சுதனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து மிரட்டல் விடுத்துவிட்டு சென்ற ஆசிக் சிறிது நேரத்தில் மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த 53ஆவது திமுக வட்ட செயலாளர் கார்த்திகேயன் (23) , சூர்யாநகரை சேர்ந்த பாஜக புதூர் மண்டல செயலாளர் ஜெகன், பிரகாஷ்(23), அய்யர்பங்களா பகுதியை சேர்ந்த சுதர்சன் (22)ஆகியோருடன் மீண்டும் பெட்ரோல் நிலையத்திற்கு வந்து ஹரிஹரசுதன் மீது பைக்கை ஏற்றியதோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் ஹரிஹரசுதன் அணிந்திருந்த தங்க செயினையும் பறித்துசென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த ஐடி நிறுவன ஊழியரான ஹரிஹரசுதன் தரப்பில் திருப்பாலை காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து திருப்பாலை காவல்துறையினர் மதுரை 53ஆவது திமுக வட்ட செயலாளர் கார்த்திகேயன் (23) , சூர்யாநகரை சேர்ந்த பாஜக புதூர் மண்டல செயலாளர் ஜெகன், கே.புதூரை சேர்ந்த முகமது ஆசிக் (23), பிரகாஷ்(23), அய்யர்பங்களா பகுதியை சேர்ந்த சுதர்சன் (22)ஆகிய 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது