ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (10:53 IST)

விஜய் மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா? ஜோதிடரை அணுகிய புஸ்ஸி ஆனந்த்..!

Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மாற்று தேதி குறிப்பதற்காக  புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்திய விஜய், நிர்வாகிகளை நியமனம் செய்தார். அதைத்தொடர்ந்து, அண்மையில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, கொடியேற்றி வைத்தார். 
 
இந்நிலையில்  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை இந்த மாதம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். முதலில் இந்த மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், அங்கு இடம் கிடைக்காததால் சேலம், ஈரோடு எனப் பல்வேறு ஊர்களில் இடம் பார்க்க முயன்றனர். அங்கும் இடம் கிடைக்காத நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

வரும் 23 ஆம் தேதி மாநாட்டை நடத்த தவெகவினர் முடிவு செய்துள்ளனர்.  இதற்காக  நடத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரி மனு அளித்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் குறிப்பிடப்பட்ட இடத்தில், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, தவெக தரப்பு அனுமதி கோரிய மனுவில் குறிப்பிட்ட இடம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளதால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாநாடு தொடர்பாக புஸ்ஸி ஆனந்திற்கு, டிஎஸ்பி பார்த்திபன் கடிதம் அனுப்பியுள்ளார். பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட 21 கேள்விகளை எழுப்பி, அதற்கு பதில் அளிக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஜோதிடர் ஒருவரை சந்தித்து பேசியதாக தகவல் வழியாகியுள்ளது.

 
அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என விஜய் முடிவு செய்துள்ளார். மேலும் மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.