கருணாஸ் உள்பட 3 எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கையா? அதிமுக கொறடா விளக்கம்
அதிமுக எம்.எல்.ஏக்களான அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளதால் மூவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார். எனவே சபாநாயகர் தனபால் இந்த விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த அதிமுக கொறடா ராஜேந்திரன், '3 எம்எல்ஏக்களும் விளக்கம் தரும் பட்சத்தில் எந்தவகையான முடிவையும் எடுக்க சபாநாயகருக்கு உரிமை உண்டு என்றும், 3 எம்எல்ஏக்களும் டிடிவியுடன் எப்போது சேர்ந்தார்களோ அப்போது இருந்தே எங்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் ஆட்சிக்கு எதிராக தமிமுன் அன்சாரி, கருணாஸ் , தனியரசு ஆகியோர்கள் செயல்பட்டார்கள் என கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும், இதுகுறித்து ஏதாவது ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிமுக கொறடா ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அந்த மூன்று எம்.எல்.ஏக்களும் எங்கள் அணியில் இல்லை என்றும், அதனால் அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்றும் டிடிவி தினகரன் அணியின் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.