வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (15:54 IST)

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலி..! நடிகர் விஜய் இரங்கல்..!!

Vijay
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியான சம்பவத்திற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
 
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
 
தமிழர்கள் 7 பேர் பலி:
 
உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்தில் தமிழர்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Kuwait Fire
தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை குவைத் அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை செய்து வருகின்றனர். உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளது. 

தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில், 42 பேர் இந்தியர்கள் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், மற்றவர்கள் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர்.
 
விஜய் இரங்கல்:
 
இந்நிலையில் தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

 
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.