ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (13:36 IST)

விஜயகாந்த் மறைவு: சிவகார்த்திகேயன், பாரதிராஜா, சேரன், அருண்விஜய் இரங்கல்...!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகர்  சிவகார்த்திகேயன், இயக்குனர் சேரன், நடிகர் அருண் விஜய் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
 
சிவகார்த்திகேயன்:
 
தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது. 
 
எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர்,
அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். 
 
அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு.  
 
புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
 
இயக்குனர் பாரதிராஜா:
 
தமிழ்நாட்டு மக்கள் அவ்ளோ சீக்கிரம் யார் மேலயும் அன்பு வச்சிற மாட்டாங்க அப்படி வச்சிட்டா சாகுற வரைக்கும் அந்த அன்பு மாறவே மாறாது.. உங்கள் பேச்சுக்கள், படங்கள், பாடல்கள் மூலம் என்றும் மக்கள் மனதில் வாழுவீங்க கேப்டன்
 
இயக்குனர் சேரன்:
 
வார்த்தைகளை தேடுகிறேன் கேப்டன்.. இறப்பு செய்தி குறித்த எந்த வார்த்தைகளுமே உங்களுக்காக எழுத மனம் ஒவ்வவில்லை..  வாழும் காலம் முழுதும் சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் நீங்கள்... தீரா நோயிலிருந்து விடுதலை பெற்று போய் வாருங்கள்... வணங்குகிறேன்.. 
 
 
நடிகர் அருண்விஜய்:
 
மனித குலத்திற்கு ஓர் பேரிழப்பு. தன்னலத்தை பின் நிறுத்தி, மக்களுக்காகவே உழைத்த ஓர் உத்தமமான உள்ளம், நம் கேப்டன். நமது சினிமா துறையில், நான் கண்டு வியந்து பெருமதிப்பு வைத்திருந்த ஒருவர். இவரது இழப்பினை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனதிடத்தை அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் ஆண்டவன் வழங்க வேண்டும். ஓம் சாந்தி 

Edited by Mahendran