திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (13:47 IST)

திமுக ஆட்சிக்கு வந்தாலே, கோவைக்கு தீமைதான்- அண்ணாமலை

bjp
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அவர் தற்போது கோவையில்  என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது கோவையில்  அண்ணாமலை பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,

''என் மண் என் மக்கள் பயணம், பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் இதயத்துக்கு நெருக்கமான கோவை தெற்கு தொகுதியில் சிறப்புடன் நடைபெற்றது. கோவை ‘பாஜகவின் கோட்டை’ என்பதை, மீண்டும் ஒருமுறை பெருந்திரளெனக் கூடி, ஐந்து மணி நேரம் 15 நிமிடம் உடன் நடந்து, கோவை சகோதர சகோதரிகள் நிரூபித்திருப்பதில் மகிழ்ச்சி. 
 
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், சினிமா மோகத்தைப் புறக்கணித்து, கோவை தேசியத்தின் பக்கம், ஆன்மீகத்தின் பக்கம், உண்மையின் பக்கம் என்று, சகோதரி வானதி சீனிவாசன் அவர்களை வெற்றிபெறச் செய்தது, பாஜகவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி. தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் உத்வேகம் அளித்த வெற்றி.
 
திமுக ஆட்சிக்கு வந்தாலே, கோவைக்கு தீமைதான். 1996 - 2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் குண்டு வெடிப்பு நடந்து, கோவையின் வளர்ச்சி 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. பின்னர், அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், கோவைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி, புத்துயிர் பெற்றது. கோவை அடுத்த கட்டத்துக்குச் சென்றது. திமுக 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. வரலாறு காணாத மின்வெட்டின் காரணமாக, கோவையில் சிறுகுறு நடுத்தர தொழிற்சாலைகள் நலிவடைந்து விட்டன. தற்போதைய திமுக ஆட்சியில், மிகப்பெரிய நாசகார செயலில் இருந்து கோவையை கோட்டை ஈஸ்வரன் காப்பாற்றியிருக்கிறார். சத்ரு ஸம்ஹார மூர்த்தியாக எதிரிகளை வதம் செய்யும் முருகப் பெருமான், கோவைக்கு வந்த பேராபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.  என்ஐஏ விசாரணை செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை பல இடங்களில் சோதனை செய்து, பலரைக் கைது செய்து உறுதி செய்திருக்கிறது. ஆனால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சிலிண்டர் வெடிப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பாஜகவினர் குரல் கொடுக்கவில்லை என்றால், தீவிரவாதியைத் தியாகி ஆக்கி, இழப்பீடு பத்து லட்சம் கொடுத்திருப்பார்கள். கடந்த தேர்தலில், சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி, கொலுசு, டிபன் பாக்ஸ், ஹாட் பாக்ஸ் எல்லாம் கோவைக்குள் கொண்டு வந்தார். நல்ல எண்ணம் இருக்கும் மக்கள் நிறைந்துள்ள கோவைக்கு, தீமை வந்தால் அதுவே விலகிவிடும். செந்தில் பாலாஜி எனும் மற்றுமொரு ஆபத்திலிருந்தும் கோவை தப்பித்துவிட்டது.
 
எந்த அரசு, எந்தக் கட்சி, எந்தத் தலைவர் தமிழகத்துக்காக, மக்களுக்காக இருக்கிறார்கள் என்பதில் கோவை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். குட்டி இந்தியா என்று  கோவையை அழைக்கலாம். இங்கு ராஜஸ்தான், பெங்காலி, மராட்டி, இஸ்லாம் என அனைத்து சமூக மக்களும் சகோதரர்களாக அன்புடன் வசிப்பது இந்தியாவைப் பிரதிபலிக்கிறது. திமுகவைப் போல அல்லாமல், அனைவரும் வேண்டும், அனைவரும் இணைந்து வலிமையான தமிழகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதே பாஜக மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் விருப்பம். பிரிவினையைத் தூண்டும் திமுக எனும் தீயசக்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள்''என்று தெரிவித்துள்ளார்.