1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:21 IST)

தமிழகத்திற்கு எத்தனை கோடி முதலீடுகள் வந்துள்ளது.? வெள்ளை அறிக்கை வெளியிடுக.! ராமதாஸ்..!!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து வருகிற 13-ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
 
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த 3 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதல்வர் ரூ.6,100 கோடிக்கான முதலீடுகளை ஈர்க்க கையெழுத்திட்டார் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3,440 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார் என்றும் தகவல் வெளியான நிலையில், இதுவரை ஒரு ரூபாய்கூட முதலீடு வந்துசேரவில்லை என்றும் ராமதாஸ் விமர்சித்தார்.
 
சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது எனத் தெரியவில்லை என குறிப்பிட்ட அவர், எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் திமுகவின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும் என்றும் இடஒதுக்கீடு தொடர்பாக 35 ஆண்டுக்கால வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த திமுக தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டிய ராமதாஸ், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் இன்று வலியுறுத்தினார்.

 
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்றும் இதை உச்ச நீதிமன்றமும், பாட்னா உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.