ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (11:06 IST)

எப்போதுமே சூப்பர் ஸ்டார் டாஸ்மாக்தான் – ஆச்சர்யப்பட வைக்கும் ஆண்டு வருமானம் !

சென்ற 2017-2018 ஆண்டு மட்டும் டாஸ்மாக் கடைகளின் முலம் கிடைத்த வருமானம் எவ்வளவு என்று தமிழ்நாடு வாணிபக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் அதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகமாகவும் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்து வருகிறது.

ஆனால் டாஸ்மாக் கடைகளால் மக்கள் வாழ்க்கை பெரிதும் சீரழிந்து இளைஞர்கள் தவறானப் பாதையில் செல்வதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர். ஆனால் அரசு( எந்த அரசானாலும்)  அவர்களின் கோரிக்கைகளைத் துளியும் காதில் வாங்காமல் மதுவிலக்கை வெறும் தேர்தல் அறிக்கைகளில் வரும் வாக்குறுதியாக மட்டுமே உபயோகித்து வருகிறது. இவ்வளவு வருமானம் வரும் துறையைக் கைவிட மனதில்லாமல் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை வெட்கமின்றி நடத்தி வருகிறது.

2017-18ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் வருவாய் அறிக்கை நேற்று வெளியானது. அதில் டாஸ்மாக் மூலம் மட்டும் தமிழக அரசுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வருமானத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.