டாஸ்மாக் கடைகளில் வருகிறது சிசிடிவி ! – ஏன் தெரியுமா ?

Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (12:18 IST)
டாஸ்மாக் கடைகளில் அடிக்கடி ஏற்படும் கொள்ளை சம்பவங்களைத் தடுக்கும் பொறுட்டு 3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவிக் கேமராக்கள் பொறுத்தப்பட இருக்கின்றன.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் இது அதை விட அதிகமாகவும் இதன் மூலம் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

ஆனால் டாஸ்மாக் கடைகளால் மக்கள் வாழ்க்கை பெரிதும் சீரழிந்து இளைஞர்கள் தவறானப் பாதையில் செல்வதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொண்டாமல் மதுவிலக்கு என்பதை தேர்தல் வாக்குறுதியாக மட்டுமேப் பயன்படுத்தி வருகிறது.


இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் நாள் முழுவதும் மது விற்பனை மூலம் வசூலாகும் தொகை மறுநாள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவற்றை பணியாளர்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லும்போது அவர்களைத் தாக்கிக் கொள்ளையர்கள் பணத்தை திருடி செல்லும் சம்பவங்கள் கடந்தக் காலங்களில் அதிகமாக நடைபெற்றன. எனவே அதைத் தடுப்பதற்காக வசூல் தொகையைக் கடைகளிலேயே வைத்துவிட்டுப் போகுமாறுப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நள்ளிரவில் கடையை உடைத்துப் பணத்தைத் திருடும் போக்கு அதிகமானது. இதனைத் தடுக்க முடியாமல் போலிஸார் தவித்து வந்தனர்.

இது போன்றக் குற்றச்செயல்களைத் தடுக்க டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்தது.  அதன் முதற்கட்டமாக, இப்போது 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடைக்கு 2 கண்காணிப்பு கேமரா என 3,000 கடைகளுக்கு 6,000 கேமராக்களைப் பொருத்த 5 கோடி மதிப்பிலான டெண்டர் டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிசிடிவிக் கேமராக்களை  நேரடியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.இதில் மேலும் படிக்கவும் :