திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (16:18 IST)

வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!!

Stalin
இண்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  சோனியா காந்தி அம்மையார், எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி, மரியாதைக்குரிய பரூக் அப்துல்லா, மரியாதைக்குரிய தோழர்கள் சீதாராம் யெச்சூரி, டி. ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் ஒன்றுகூடி முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவில் இதயப்பூர்வமான மரியாதை செலுத்திய இந்நாளில், அவரை ஒரு மாநிலத் தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராகப் போற்றி வணங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கூட்டாட்சியியல் மற்றும் மக்களாட்சிக்காகத் தொடர்ந்து உறுதியாகக் குரல்கொடுத்த தலைவர் கலைஞர் அவர்கள் தேசக் கட்டுமானத்தில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
நெருக்கடியான காலங்களில், ஒன்றிய அளவில் நிலையான ஆட்சி தொடர்வதை உறுதிசெய்துள்ளார் என்றும் பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்வதில் முக்கியப் பங்குவகித்து இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை பக்குவமாக வடிவமைத்தவர் கருணாநிதி என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 
அவரது நூற்றாண்டு நிறைவில் பெற்ற புது உத்வேகத்துடன் நாளை (ஜூன்-4) நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியைக் கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்