ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (12:20 IST)

ஆளுநர் உரை உப்பு சப்பு இல்லாத உரை.! மரபை மீறி செயல்படுகிறார் சபாநாயகர்..! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!!

eps speech
தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் இது உப்பு சப்பு இல்லாத உரை, ஊசி போன பண்டம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
 
சட்டமன்றக் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநருக்கு அரசுக்கும் என்ன பிரச்சனை என்பதை, அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
 
மரபை மீறி செயல்படுகிறார் சபாநாயகர்:
 
சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும் ஆனால் அவர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபு மீறப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர் அப்பாவு மரபை மீறி செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினர்.
 
அதிமுக திட்டங்கள் முடக்கம்:
 
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு ரிப்பன் வெட்டி தற்போது அதனை செயல்படுத்தி வருவதாக அவர் விமர்சித்தார்.
 
மேலும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக்,  இலவச மடிக்கணினி, அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு கைவிட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
 
அவசர கோலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு:
 
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்ற அருமையான திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்ததாகவும், ஆனால் திமுக அரசு அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்ததால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

 
சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதியை திமுக அரசு ஏற்படுத்தி தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகள் ஓட்டை உடைச்சலாக தான் இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.