1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (17:52 IST)

பிப்.12-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.! பிப்.19-ல் பட்ஜெட் தாக்கல்.! சபாநாயகர் அப்பாவு..!!

appavu
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து, பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அவர், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது என்றார். நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர்  ஆர்.என் ரவி உரையுடன் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
பிப்ரவரி 19ஆம் தேதி 2024 - 2025 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் அவர் கூறினார்.
 
பிப்ரவரி 20-ஆம் தேதி  2024 - 25 ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கைகள் மற்றும் பிப்ரவரி 21-ஆம் தேதி ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் அளிக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

 
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், மக்களை கவரும் வகையில் தமிழக பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது.