செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (15:36 IST)

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு..! ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

senthil balaji
செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில்  மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.
 
கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். 
 
இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய  குற்றப்பிரிவு  காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணையில் உள்ளது. 
 
இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30 தேதிக்குள் விசாரித்து  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது. 
 
இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 
 
அதில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் வரை குற்றபத்திரிகையில் குற்றவாளி என சேர்த்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

 
இந்நிலையில் நீதிபதி ஜெயவேல் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என மீண்டும் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 4 தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.