அமைச்சர் பதவியை அடுத்து மாவட்ட செயலாளர் பதவியும் பறிப்பா? செந்தில் பாலாஜி வருத்தம்?
செந்தில் பாலாஜி சமீபத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது கரூர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோக இருப்பதாக திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இதன் காரணமாக இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்காதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் நெருங்கி வருவதால் கரூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் தேர்தல் நேரத்தில் முக்கியமான பணிகளை செய்ய மாவட்ட செயலாளர் அவசியம் என்றும் திமுக தலைமை கருதி வருகிறதாம்.
இதனை அடுத்து செந்தில் பாலாஜியை சமாதானம் செய்து கரூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஜாமீன் கிடைக்கவில்லை என்பது மட்டும் இன்றி இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறி இருப்பதால் மூன்று மாதத்தில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும் என்று செந்தில் பாலாஜி கருதி வருகிறாராம். இந்த நிலையில் அவரது மாவட்ட செயலாளர்கள் பதவியும் பறிபோக இருப்பதாக கூறப்படுவதால் செந்தில் பாலாஜி தரப்பு வருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran