தீபாவளி பரிசு காத்திருக்கு... சோப்பு வாங்கினால் கார் இலவசம்!!
புதுக்கோட்டையில் சினிமா பாணியில் நூதன மோசடியில் ஈடுப்பட்ட இருவரை வசமாக போலீஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளார் விவசாயி.
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ளதால் தீபாவளி பரிசு, சலுகை என சிலர் மோசடிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவ்வாறான மோசடி ஒன்றுதான் புதுக்கோட்டையில் வசித்து வரும் தம்பதியினரிடம் நடந்துள்ளது.
சோப்பு வியாபாரிகள் என தங்களை அறிமுகம் செய்துக்கொண்ட இருவர், சோப்பு வாங்கினால் ஒரு கூப்பன் கொடுக்கப்படும் அந்த கூப்பனில் என்ன பரிசு பொருள் உள்ளதோ அது உங்களுக்கு கொடுக்கப்படும் என தம்பதியினரிடம் கூறியுள்ளனர்.
இதை நம்பி சோப்பு வாங்கி கூப்பன் பெற்ற தம்பதியினருக்கு கூப்பனில் கேஸ் ஸ்டவ் இருந்தது. உடனே அதை இருவர் பரிசாக வழங்கினர். அதனை தொடர்ந்து மேலும் ஒரு கூப்பன் இருப்பதாக கூறியுள்ளனர். அதில் மோட்டார் பைக் இருந்துள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் கேஸ் ஸ்டவ் போல மோட்டார் பைக்கும் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த 2 பேரும் மோட்டார் பைக் வேண்டும் என்றால் ரூ.10,000 வரி செலுத்த வேண்டும் என கூற, அந்த தம்பதியினரும் காசை கொடுத்துள்ளனர்.
மறுநாள் பைக் கொண்டுவருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு இருவரும் சென்றுள்ளனர். சொன்னது போல மறுநாள் இருவரும் வந்து இதேபோல் வேறு ஒரு நபருக்கு கார் பரிசாக விழுந்தது. ஆனால் வரி கட்ட அவர்களிடம் பணம் இல்லை. எனவே நீங்கள் காரை வாங்கிக்கொள்கிறீர்களா என கேட்டுள்ளனர்.
இதற்கு அந்த தம்பதியினர் சம்மதம் தெரிவித்து காருக்கு வரியாக ரூ.45,000 கொடுத்துள்ளனர். இதன் பின்னர் அடுத்த நாள் போன் செய்து நாங்கள் காரை எடுத்துக்கொண்டு வந்தோம் ஆனால் போலீஸார் ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அபராதம் செலுத்தும்படி ரூ.20,000 கேட்கின்றனர் நீங்கள் கொஞ்சம் பணம் தருகிறீர்களா என கேட்டுள்ளனர்.
மீண்டும் மீண்டும் பணம் கேட்பதால் சுதாரித்துக்கொண்ட தம்பதியினர் போலீஸாரை கையோடு அழைத்துக்கொண்டு சென்று அந்த இருவரையும் கையும்களவுமாக பிடித்து கொடுத்துள்ளார். அந்த தம்பதியினரை போலீசார் பாராட்டியதோடு பணத்தை திரும்பி பெறுவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.