ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 அக்டோபர் 2019 (12:26 IST)

தொடர்ந்து சரியும் அமமுக: புதுக்கோட்டை பிரமுகர் திமுகவில் இணைந்தார்!

அமமுகவிலிருந்து பல உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வரும் சூழலில் தற்போது புதுக்கோட்டை அமமுக பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக கட்சி சமீப காலமாக தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. கட்சியின் முக்கிய உறுப்பினர்களான செந்தில் பாலாஜி, தங்க.தமிழ்செல்வன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதனால் கட்சியில் பலருக்கு அமமுக தொடர்ந்து நிலைத்து நிற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுகவும் தனது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதனால் மாவட்ட வாரியாக பல அமமுக தொண்டர்கள் அதிமுகவிலும் இணைந்துள்ளனர். கட்சியின் உள்குழப்பங்கள் அதிகமாக இருப்பதாலேயே எதிர்வரும் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.

தற்போது புதுக்கோட்டை அமமுக பிரமுகரான பரணி கார்த்திகேயன் தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்துள்ளார். இதனால் புதுக்கோட்டை பகுதியில் அமமுக சரிவை சந்தித்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக டெல்டா பகுதிகளிலும் அமமுக செல்வாக்கை இழக்கும் என கூறப்படுகிறது. அமமுக உறுப்பினர்கள் திமுகவில் இணைந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விடர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.