செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (14:39 IST)

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, விளம்பரம் செய்வதில் மட்டும்தான் கவனம்-அண்ணாமலை

திமுக அரசு, வீண் விளம்பரங்களுக்குச் செலவிடுவதை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:

''கடந்த ஜூன் 15 அன்று, பெரிய விளம்பரத்தோடு, தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால், அவரது தந்தையின் பெயரில் கிண்டியில் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், கடந்த மூன்று மாதங்களாக மருத்துவர்களுக்கும் இதர பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை என்று இன்றைய நாளிதழ்களில் வந்துள்ள செய்து மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 
 
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, விளம்பரம் செய்வதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, எந்தத் திட்டங்களும் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதில்லை. மூன்று மாதங்கள்,  மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இருந்தால், அவர்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் என்பதைக் கூட உணராமல் திமுக அரசு செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 
 
திமுக அரசு, வீண் விளம்பரங்களுக்குச் செலவிடுவதை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். உடனடியாக, கிண்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஊதியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், முதலமைச்சர், மருத்துவமனைக்குத் தனது தந்தையின் பெயர் வைத்திருக்கும் மரியாதையையாவது காப்பாற்றிக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் தமிழக பாஜக   சார்பாக வலியுறுத்துகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.