வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (17:52 IST)

திருவாரூரில் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு, உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ் கோரிக்கை..!

திருவாரூரில் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த கேரள மாநிலம் பசும்பாரா பகுதியைச் சேர்ந்த இந்து என்ற மாணவி  காய்ச்சல் காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவியின் மறைவுக்கு எந்த வகையான காய்ச்சல் காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடப்பு மாதத்தில் மட்டும்  5 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது தான் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கும், நோய் பாதிப்பு தீவிரமடைவதற்கும் காரணம் ஆகும்.  டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து  ஓரளவு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும்,  டெங்கு காய்ச்சலை எவ்வாறு கண்டறிவது? அதற்கு எத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்வது? என்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் ஏற்படுத்தபடவில்லை. டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் பலருக்கு நோய் முற்றிய நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம் ஆகும்.
 
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்கள் தவிர,  போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலுடன் உரிய சிகிச்சைகள் பெறாமல் இருக்கலாம்.  அவர்களுக்கு சரியான மருத்துவம் அளிக்கப்படாத நிலையில், அவர்களின்  உடல்நிலை மோசமடையக் கூடும். அத்தகைய சூழல் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அந்த முகாம்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவம் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
Edited by Mahendran