திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (13:45 IST)

அணி மாறுவார்களா எம்.எல்.ஏக்கள்?- தூசி தட்டப்படும் வழக்குகள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டியும், மிரட்டியும் அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துள்ளார் சபாநாயகர் தனபால். அதற்கு நீதிமன்றத்தில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், அக்டோபர் 4ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது தீர்ப்பு சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக அமையும் என செய்திகள் உலா வருகிறது. அப்படி நடந்துவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு வெற்றி பெற முடியாது.
 
எனவே, இந்த 15 நாட்களில் எப்படியாவது தினகரன் தரப்பிலிருந்து சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி அணியினர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தொடக்கத்தில் அவர்களிடம் பேரம் பேசப்பட்டதாகவும், அதில் மயங்காததால் தற்போது மிரட்டும் தொனியை அவர்கள் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில், மறைமுகமாக மத்திய அரசும் அவர்களுக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.
 
இதன் விளைவாகத்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் பழைய வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டது. அந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், கரூரில் உள்ள அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள் வீடு என மொத்தம் 16 இடங்களில் இன்று வருமானத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


 

 
மேலும், மீதமுள்ள எம்.எல்.ஏக்கள் மீது என்னென்ன வழக்குகள் இருக்கிறது, அவர்களின் குடும்ப பின்னணி அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு இருக்கிறதாம். அதைவைத்து அவர்கள் மீது வழக்குகள் பாயலாம். அல்லது வழக்குப் போடப்போவதாக அவர்கள் மிரட்டப்படலாம் எனத் தெரிகிறது. எனவே, வழக்குக்கு பயந்து அவர்கள் தினகரனை விட்டு எடப்பாடி அணிக்கு வருவார்கள் என திட்டமிடப்பட்டிருக்கிறதாம். 
 
இது ஒருபக்கம் எனில், தகுதி நீக்கம் செய்யப்பட்டவுடனேயே, சொகுசு விடுதியில் இருக்கும் இரண்டு பெண் எம்.எல்.ஏக்கள் உட்பட சில எம்.எல்.ஏக்கள் அழுது புலம்பியதாகவும், தங்க தமிழ்செல்வனோடு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, அவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவியை கொடுத்து விடுகிறோம் என ஆசை காட்டியும் தங்கள் பக்கம் வளைக்கும் திட்டத்தையும் எடப்பாடி தரப்பு வைத்திருப்பதாக தெரிகிறது.
 
ஆக்டோபர் 4ம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன், தினகரன் கூடாரத்தை காலி செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பு முயன்று வருவதாக கூறப்படுகிறது.
 
இதில் எத்தனை பேர் எடப்பாடி பக்கம் செல்வார்கள், தினகரன் பக்கம் எத்தனை பேர் நீடித்து நிற்பார்கள் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.