புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (10:07 IST)

ஆதிச்சநல்லூர் மட்டும்தானா? கீழடியையும் சேர்த்துக்கோங்க! – பட்ஜெட் தாக்கலுக்கு எடப்பாடியார் பாராட்டு!

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நாட்டை முன்னேற்றும் வகையிலுல், ஊக்கப்படுத்தும் வகையிலும் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2020 – 2021ம் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயம், தொழில்நுட்பம், சிறு தொழில்கள், வரி விதிப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களில் சூரிய சக்தி மின்சார தகடுகள் அமைப்பது, நீர்பற்றாக்குறை நிலவக்கூடிய 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள், தேசிய காவல் பல்கலைகழகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பாராட்டி வரவேற்று பேசியுள்ள அவர் இந்த திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

சட்டம் ஒழுங்கில் முன்னிலையில் உள்ள தமிழகத்தில் தேசிய காவல் பல்கலைகழகம் அமைக்கவேண்டும் என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைப்பது போல, கீழடியிலும் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.