திமுகவா? பாஜகவா? மக்கள்தான் முடிவு செய்வார்கள்!- அமைச்சர் ராமச்சந்திரன்!
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.
இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்தியாவிலேயே தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் வருவதாக தெரிவித்தார்.
சுற்றுலா துறையில் இந்தியாவில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்திலும், வெளிநாட்டு சுற்றுலா வருகையில் 2 வது இடத்தில் உள்ளதாகவும் இதனை முழுமையாக முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். சுற்றுலா துறையை பொருத்தவரை வருமானம் வரக்கூடிய துறையாக உள்ளது என கூறிய அவர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும், வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.
இந்த சூழலில் கோவை மாவட்டத்தில் வாலாங்குளம் பகுதியில் ஏற்கனவே படகு இல்லம் அமைக்கப்பட்டது என குறிப்பிட்ட அவர் அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்த வசதி இல்லாததால் கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த பகுதியில் கார் பார்க்கிங் ரெஸ்டாரன்ட் ஆகியவையும் அமைக்கப்படுகிறது எனவும் தற்போது அதற்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அரசியல் குறித்தான தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் எனவும் கூறிய அவர் நீலகிரி தொகுதியில் ஆ ராசா நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர், மேயர் ஆகியோர் உடனிருந்தனர்.