பா.ஜனதா கூட்டணியில் இருந்து இனி வெளியேற மாட்டேன்: பிரதமர் மோடியிடம் நிதிஷ்குமார் உறுதி
பாஜக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் என்றும் கடைசி வரை பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசியுள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தள தலைவராக இருந்து வரும் நிலையில் அவர் அடிக்கடி கூட்டணி மாறி வருகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சமீபத்தில் கூட அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணி இணைந்த நிலையில் நேற்று அவுரங்காபாத் மாவட்டத்தில் பிரதமர் கலந்து கொண்ட வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார்
அப்போது அவர் பேசிய போது பீகார் மாநிலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் என்றும் பீகாரில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது, பொருளாதார ரீதியாக மாநில மக்கள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளனர், அதற்கெல்லாம் காரணம் மத்திய அரசின் ஒத்துழைப்பு தான் என்று கூறினார்.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றும், இனிமேல் அணி மாற மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்றும், பாஜக கூட்டணியில் தான் கடைசி வரை நீடிப்பேன் என்பதை பிரதமர் மோடி அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
Edited by Siva