இந்தியன் வங்கியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்!
எட்டுக்குடியில் உள்ள இந்தியன் வங்கியில் அப்பக்குதியைச் சேர்ந்த ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கணக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்ற பெண்களின், தனி நபர் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை அவர்களுக்கு தெரியாமலே அவர்களை கேட்காமலேயே இந்தியன் வங்கி நிர்வாகம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சுய உதவிக்குழு மூலம் கடன்பெற்ற பெண்களின் வங்கிக் கணக்கையும் இந்தியன் வங்கி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பயனாளிகள் 100 நாள் ஊதியம் எடுப்பது உட்பட வங்கிச் செயல்பாடுகளில் ஈடுபட முடியவில்லை என்று குற்றம்சாட்டி, இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமையில் எட்டுக்குடி இந்தியன் வங்கி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வீ. மாரிமுத்து, சட்ட பேரவை உறுப்பினர் வி.பி.நாகை.மாலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.