ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (13:15 IST)

மீண்டும் தொடங்கியது தகரம் அடிக்கும் பணி! – கோவை முக்கிய வீதி மூடல்!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கோவையில் தகரம் அடித்து வீதிகளை மூடும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிர்த்து மாவட்ட நிர்வாகங்களும் மாஸ்க் அணியாவிட்டால், எச்சில் துப்பினால் அபராதம், பகுதி நேர ஊரடங்கு போன்றவற்றின் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது கொரோனா மொத்தமாக குடும்பத்தினருக்கே பரவுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை ராஜவீதி அருகே உள்ள கருப்பக்கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் அந்த வீதியை தகர சீட் கொண்டு அடைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிக்கும் பகுதிகளை தகர சீட் கொண்டு அடைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.