இதை விட அது காஸ்ட்லியா இருக்கே! பைக்கை மாற்றிக் கொண்ட திருடர்கள்!
பெரம்பூரில் ஒரு பகுதியிலிருந்து பைக்கை திருடி வந்த திருடர்கள் அதை விட விலை உயர்ந்த பைக்கை பார்த்ததும் மாற்றிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெரம்பூரில் கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் விஷால். தரமணி ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இவர் கொரோனா காரணமாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 14ம் தேதி நள்ளிரவில் அவரது வீட்டு வழியாக சென்ற இருவர் அவரது விலை உயர்ந்த பைக்கை திருடி சென்றுள்ளனர். காலையில் அவர் வந்து பார்த்தபோது அவரது விலை உயர்ந்த பைக்குக்கு பதிலாக சாதாரண பைக் ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர் போலீசார்.
அப்போது சிசிடிவியில் இரு நபர்கள் பைக்கில் வருவதும் பின்னர் விஷாலின் பைக்கை எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த பைக்கை விட்டு சென்றதும் தெரிய வந்தது. அவர்கள் விட்டு சென்ற பைக் எண்ணை கொண்டு விசாரித்ததில் அது வேறு ஒரு இடத்தில் திருடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.