பணமோசடி தம்பதிக்கே விபூதி அடித்த ஆன்லைன் சூதாட்டம்! – சென்னையில் மோசடி சம்பவம்!
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்த தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் தீபன்ராஜ் – யுவராணி தம்பதியினர். விருதுநகரை சேர்ந்த இவர்கள் தாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து 47 லட்ச ரூபாயை கையாடல் செய்து விட்டதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கையாடல் தம்பதியினரை தேடத் தொடங்கிய போலீஸார் தப்பி சென்ற தம்பதியை கடற்கரை ரயில் நிலையம் அருகே காரில் சென்றபோது மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீத பணம் எங்கே என விசாரித்தபோது அதை அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாக தெரிவித்துள்ளனர். மோசடி தம்பதிகளே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.