1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (10:02 IST)

தமிழக கொரோனா பாதிப்புகளில் 85 சதவீதம் ஒமிக்ரான் அறிகுறி..! – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் அவற்றில் ஒமிக்ரான் அறிகுறிகள் அதிகம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் இருவகை கொரோனா வேரியண்டுகளும் வேகமாக பரவ தொடங்கியுள்ளன. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி, முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தினசரி தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 2 ஆயிரம் வீதமாக பதிவாகி வருகிறது. இதில் 85 சதவீதம் ”எஸ் ஜீன்” ஒமிக்ரான் வகை அறிகுறிகளாக உள்ளன. 15 சதவீதம் டெல்டா வகை கொரோனா பாதிப்புகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும் “60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், அதிக பாதிப்பு உடையவர்களை மட்டும் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் ‘எஸ் ஜீன்’ குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.” என்று கூறியுள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.