பாஜகவில் இணைந்த கல்வெட்டு ரவி! – பதவி போவதால் கட்சியினர் முகம் சுளிப்பு!?
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அது பாஜகவினர் சிலருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நோட்டாவுடன் போட்டியிடும் அளவில் தமிழகத்தில் இருந்து வந்த பாஜக, தற்போது முக்கிய அரசியல் கட்சிகளுக்கு நிகராக வளர்ந்து வருகிறது. தேசிய அளவில் இரண்டாவது முறையாக ஆளும் கட்சி என்பதால் தமிழக மாநில கட்சி பிரமுகர்கள் பலரும் சமீப காலமாக பாஜகவில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில கட்சிகளிலிருந்து புதியவர்கள் வந்து இணையும் போது அவர்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக பாஜகவில் உள்ளவர்களுக்கு மனஸ்தாபம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் வடசென்னையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான கல்வெட்டு ரவி மற்றும் அவரது கூட்டாளி சத்யராஜ் உள்ளிட்ட பலர் நேற்று பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். காவல்துறை பட்டியலில் ஏ ப்ளஸில் இருந்த கல்வெட்டு ரவி என்கவுண்ட்டருக்கு பயந்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக பலரும் பேசி வருகின்றனர். எனினும் புதிதாக பலர் பாஜகவில் இணைவதால் தங்களுக்கான பதவிகள் பறிப்போவதாக நீண்டகால தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.