கண்டெய்னரில் வந்த கம்போடியா சிகரெட்டுகள்! – அதிர்ச்சியான சுங்க அதிகாரிகள்!
சென்னை துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட சிகரெட் கண்டெய்னரை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உலகளவில் அதிகமான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து வருகிறது கம்போடியா. இங்கிருந்து சட்ட விரோதமாக சிகரெட்டுகள் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. சென்னை துறைமுகத்துக்கு கப்பலில் ஒரு கண்டெய்னர் வந்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் மக்கும் தட்டுகள் அதில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகள் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த பெட்டிகளில் சிகரெட் படம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளனர். உடனடியாக அதிலிருந்து ஒரு பெட்டிய திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி! அதில் கம்போடிய சிகரெட்டுகள் இருந்துள்ளது.
தொடர்ந்து அனைத்து பெட்டிகளையும் பரிசோதித்ததில் கம்போடியாவிலிருந்து சட்ட விரோதமாக சிகரெட்டுகள் கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கண்டெய்னரில் சுமார் 50 லட்சம் சிகரெட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இவற்றின் இந்திய மதிப்பு 7 கோடியை தாண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள சுங்க அதிகாரிகள் இந்த கண்டெய்னரை இங்கு வரவழைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.