ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒருசில மணி நேரத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது..!
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து உடனே ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் புரளி என தெரியவந்தது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போன் எண்ணை வைத்து போலீஸ் விசாரணை செய்ததில், மிரட்டல் விடுத்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தேவராஜ் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆளுநர் மாளிகை மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலருக்கும் இதே போன்ற மிரட்டல் கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்றும் விசாரணையில் பிடிபட்டவர்கள் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது போன்ற வெடிகுண்டு மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
Edited by Mahendran