வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (15:25 IST)

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

Air India
ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் இருந்த டிஷ்யூ பேப்பரில் வெடிகுண்டு மிரட்டல் இருந்தது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவிற்கு ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 7 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமான பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த கழிவறை டிஷ்யூ பேப்பரில் வெடிகுண்டு மிரட்டல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மற்ற பயணிகளும் பீதி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து விமான அதிகாரிகளிடம் தெரிவித்தார். 
 
இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் மற்றொரு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். இதன்பின், ஏர் இந்தியா  விமானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் டெல்லி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
 
வெடிகுண்டு இருக்கிறதா என விமானம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிபொருட்களோ அல்லது உடனடி அச்சமூட்டும் பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அது விசாரணையில் பொய் என்று தெரிய வந்தது.


ஆனாலும், பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று ஏர் இந்தியா விமானத்தில் சோதனையிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.