5 ஆயிரம் கொடுத்தால் 6 லட்சம் தருவார் மோடி! – ஆசை காட்டி ஏமாற்றிய பாஜக நிர்வாகி!
கிருஷ்ணகிரியில் பாஜகவில் இணைந்தால் 6 லட்சம் தருவதாக கூறி ஏமாற்றிய பாஜக நிர்வாகி மீது மக்கள் புகார் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாஜக மகளிரணி செயலாளராக இருப்பவர் விஜயலட்சுமி. இவர் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள குரும்பட்டி, ஆலம்பட்டி முதலிய கிராமங்களில் உள்ள மக்களிடம் பாஜகவில் உறுப்பினராக இணையும்படி கூறியிருக்கிறார்.
5 ஆயிரம் ரூபாய் கொடுத்து இணைந்தால் பிரதமர் மோடி அறிவித்த திட்டத்தின் மூலம் 6 லட்சம் வரை கிடைக்கும் என கூறியுள்ளார். இதை நம்பிய மக்கள் பலர் 5 ஆயிரம் செலுத்தி பாஜகவில் இணைந்துள்ளனர். ஆனால் விஜயலட்சுமி சொன்னது போல அவர்களுக்கு 6 லட்சம் கிடைக்கவில்லை. இதைப்பற்றி மக்கள் கேட்டபோது ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார் விஜயலட்சுமி.
விஜயலட்சுமி ஏமாற்றுவதை புரிந்து கொண்ட கிராம மக்கள் அவர் மற்றும் அவர் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் அவரிடம் தாங்கள் கொடுத்த பணத்தையும் மீட்டு தருமாறு கேட்டுள்ளனர்.
இதற்கு முன்னாலும் வேறு சிலர் பிரதமர் மோடி வழங்கும் பணத்தை பெற்று தருவதாக கூறி பல்வேறு இடங்களில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.