பாஜக பிரமுகர் மனைவியுடன் தற்கொலை..! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி..!!
திண்டுக்கல் அருகே பாஜக மாநில இளைஞர் அணி பொதுக்குழு உறுப்பினர் ஒருவர், தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வத்தலகுண்டுவில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தார். மேலும் பாஜகவில் மாநில இளைஞரணி பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். இவருக்கு சிவதர்ஷினி என்ற மனைவியும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மணிகண்டனுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சிலர் அவரை மிரட்டி வந்ததாகவும், இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மணிகண்டன் அவரது மனைவியுடன் சேர்ந்து இன்று மதியம் வீட்டில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.