முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து..! யூடியூபர் மீது வழக்குப்பதிவு.!
முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து கோல்டன் பிக்சர்ஸ் என்கிற youtube சேனலில், செந்தில்குமார் என்பவர் பல்வேறு வகையான அவதூறான கருத்துக்களை பேசி காணொளி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக பல லட்சம் கோடி பணத்தை கண்டெய்னரில் வைத்து வெளிநாட்டிற்கு முதலமைச்சர் எடுத்துச் செல்கிறார் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மீது அவதூறு பரப்பிய செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொ.மு.ச பேரவை மாநில செயலாளர் எத்திராஜ், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் செந்தில்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.