திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (18:38 IST)

பலா பழம் விற்று வீடும், நிலமும் வாங்கிய கோடீஸ்வர விவசாயி!

பெரும்பாலான விவசாயிகள் கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளில் சிக்கி அதில் இருந்து மீள முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.


இந்த சூழலில் வெறும் 7 ஏக்கர் பலா தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை கொண்டு வீடு, கார், நிலம் என செழிப்பான வாழ்வை வாழும் ஒரு விவசாயி குறித்து கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த கருணாகரன் தான் அந்த வெற்றி விவசாயி. பலா பழங்கள் கொத்து கொத்தாக காயத்து இருந்த அவருடைய தோட்டத்திற்கே நேரில் சென்று அவரை சந்தித்தோம். “1988-ல இந்த தோட்டத்துல பலா கன்னு வச்சேன். மொத்தம் 7 ஏக்கர்ல 700 மரம் வச்சுருக்கேன். 4 வருசத்துல இருந்தே வருமானம் வர ஆரம்பிச்சுருச்சு. 1998-க்கு அப்பறம் ஒரு ஏக்கர்ல ஒரு லட்சம்னு 7 ஏக்கருக்கு 7 லட்சம் வருமானம் பார்க்க ஆரம்பிச்சேன்.

பலாவுக்கு பதிலா கம்பு, கேள்வரகு, வேர்கடலை மாதிரி மற்ற பயிர்கள வச்சா இவ்வளவு வருமானம் வராது. 10 ரூபாய் செலவு பண்ணா 5 ரூபாய் தான் வரும். சுத்தி கம்பேனிங்க வந்துட்டனால எல்லாம் அங்க வேலைக்கு போயிட்றாங்க. விவசாய வேலைக்கு ஆளுங்க கிடைக்குறது ரொம்ப சிரமம்.

ஆனா, பலா விவசாயத்துல வெளியில இருந்து வேலை ஆட்கள் தேவையில்லை. நான் ஒரே ஆளே 7 ஏக்கரையும் பாத்துக்கிறேன். காய் வெட்றதுக்கு மட்டும் ஒரு ஆள் இருந்தா போதும்.” என்றார்.

தண்ணீர் பயன்பாடு குறித்து கேட்ட போது, “இங்க தென் மேற்கு பருவ மழை ஒரு மூணு மாசமும், வட கிழக்கு பருவ மழை ஒரு மூணு மாசமும் பெய்யும். அதுனால அந்த மாசத்துல தண்ணீ பாய்ச்ச வேண்டிய தேவை இல்ல. மாசி, பங்குனி, சித்திரையில மட்டும் இரண்டு இல்ல மூண்ணு முறை தண்ணீ பாய்ச்சுவேன். பொதுவா பலா மரத்துக்கு அதிகமா தண்ணீயும் தேவை இல்ல.

விற்பனை செய்யுறதுலயும் பெரிய சவாலாம் இல்ல. வியாபாரியே நேரடியா வந்து வாங்கிட்டு போயிருவாங்க. அப்படி இல்லனா கூட கமிஷன் மண்டிக்கு அனுப்பி வித்துறலாம். அதுனால, காய் விக்கிறதுல எந்த பிரச்சினையும் இல்ல.” என கூறியவர் தனது தோட்டத்திலேயே அதிக காய் விளையும் ஒரு தாய் மரத்தை பற்றி பேச ஆரம்பித்தார்.

“2008-ல ஒரு கின்னஸ் ரெக்கார்ட் பண்ணலாம்னு முயற்சி பண்ணேன். தோட்டக் கலை துறை அதிகாரிங்க முன்னாடியே ஒரு காய எடை போட்டு பார்த்தோம். அந்த காய் 110  கிலோ வந்துச்சு. ஆனா, கொஞ்சம் தாமதமா அப்ளை பண்ணனால ரெக்கார்ட்ல பதிய முடியல.

இதே போல இந்த மரத்தோட தாய் மரத்துலயும் பழங்கள் பெரிசு பெரிசா வந்துச்சு. அந்த காய வாங்குறது ஆந்திரால இருக்குற நெல்லூர்ல இருந்து ஆள் வருவாங்க. அப்போவே ஒரு காய 300 ரூபாய்க்கு வாங்கிட்டு போனாங்க. அந்த சமயத்துல ஒரு ஏக்கர் நிலத்தோட விலையே 100 ரூபாய் தான்” என கூறி மலைப்பூட்டினார்.

மேலும், தொடர்ந்த அவர் “3 ஏக்கர் தோட்டத்துல பலாவில இருந்து வந்த வருமானத்த சேமிச்சு வச்சு நிலம் வாங்குனேன். அந்த நிலத்தோட மதிப்பு இப்போ ரூ.3 கோடி வரும். அதேபோல 15 வருசத்துக்கு முன்னாடி 30 லட்சத்துல ஒரு வீடும் கட்டுனேன். அதோட மதிப்பு இப்போ ஒரு கோடி வரும். இது மட்டுமில்லாம 2009-ல ஃபோர்ட் காரும் வாங்குனேன். பலா மரத்துனால நல்லா வருமானம், நிம்மதியான வாழ்க்கை. என்னைய பார்த்து சுத்தி இருக்குற விவசாயிங்க நெறைய பேரு பலா வளர்க்குறாங்க. அதுனால, எல்லா விவசாயிகளும் பலா மரம் வளர்க்கலாம். நல்லா பராமரிச்ச ஏக்கருக்கு வருசத்துக்கு கண்டிப்பா ஒரு லட்சம் வருமானம் பார்க்கலாம்” என உறுதியாக கூறினார் சாதனை விவசாயி திரு. கருணாகரன்.

மரம் சார்ந்த விவசாயம் குறித்து இலவச ஆலோசனைகள் பெற காவேரி கூக்குரல் இயக்கத்தை 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 Edited By: Sugapriya Prakash