செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (12:38 IST)

கலைஞர் உரிமைத் தொகை : பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி சோதனை

MK Stalin
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில், குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில்  முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தபோது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்கள் முன்னர் விநியோகிக்கப்பட்ட நிலையில் ஏராளமான பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருவதாகவும், சரிபார்த்த பின்னர் தகுதியான பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர் குறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி விண்ணப்பித்தவர்களில் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தகுதி பெற்றுள்ள பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 15 முதல் வங்கி கணக்கில் ரூ.1000 கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த   நிலையில், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில், குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி முலம் அனுப்படவுள்ளதாகவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது சோதிக்கப்படவுள்ளது.  

மேலும், இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவலும் ஒரு  விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தகவலும் வெளியாகிறது.