''அண்ணாமலை சிங்கம்.... அவர் உண்மையைத்தான் பேசுவார்'' - நடிகை குஷ்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை கூறியதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து, எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுபற்றி பாஜக நிர்வாகி குஷ்புவிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அண்ணாமலை உண்மையைத்தான் பேசுவார் என்று கூறியுள்ளார்.
தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டின்போது, ஊழல்வாதி என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்திருந்தார்.
அதில், அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவைத் தேடி போயஸ் கார்டனுக்கு மோடி, அருண்ஜெட்லி உள்ளிட்டோர் வரிசையாக காத்திருந்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் பாஜகவை ஓட ஓட விரட்டியவர்கள் நாங்கள்… 2024 லும் அதே நிலையை ஏற்படுத்த தயங்க மாட்டோம். தலைவர் என்ற பொறுப்புக்கு தகுதியற்றவர் அண்ணாமலை என்று ஜெயக்குமார் கண்டம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த அவர் கூறியதாவது:
''ஜெயக்குமார் அவர்கள் பேசியதற்கு என்னால் பதில் கொடுக்க முடியாது. இதற்கு அண்ணாமலைதான் பதில் கொடுக்க முடியும். அதிமுகவுடன் பாஜக் மோதல் என்று கூறமுடியாது. அமித்ஷாவே கூட்டணி தொடரும் என்று கூறிவிட்டார். அவர் சரியாக பேசினாரா…இல்லையா என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததவுடன் சிறை சென்றார். அதைத்தொடர்ந்து இபிஎஸ் உடன் எங்கள் நட்பு உள்ளது. கூட்டணி என்றால் சில வார்த்தைகள் அங்கிருந்தும், இங்கிருந்தும் வருகிறது.
அண்ணாமலை சிங்கம்….அவர் உண்மைதான் பேசுவார் என்று கூறியுள்ளார்.