வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2025 (18:49 IST)

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

Annamalai Stalin
டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாவது:
 
முதல்வர் ஸ்டாலின்: நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்!
 
சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின்  உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!
 
இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!
 
அண்ணாமலை: கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலித்து, மதுரை மாவட்டம் மேலூர் பகுதி கிராமங்களில், டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததற்காக, மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி  அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
 
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமரின் முடிவு, நமது விவசாயிகளின் நலனில் அவர் கொண்டுள்ள அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில், நமது பாசத்திற்குரிய பிரதமர் அவர்கள், சொன்ன சொல்லின்படி நடந்து கொள்வதை எடுத்துக் காட்டியிருக்கிறது.
 
மதுரை மேலூர் அம்பலக்காரர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து, அவர்கள் கோரிக்கையைப் பரிசீலித்ததற்காக, நமது மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு. கிஷான் ரெட்டி  அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
 
Edited by Mahendran