வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? ஏற்கனவே, குறித்த நேரத்தில், காலதாமதமின்றி வரைபட அனுமதி பெறப் பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சுயசான்று அடிப்படை என்று கூறி லஞ்ச ஊழலை அதிகாரப்பூர்வமாக்கியிருக்கிறது திமுக என்பதுதான் உண்மை.
பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? அதிகக் கட்டணம் செலுத்தினால், கட்டிட வரைபடம் சரிபார்த்தல், கட்டிடம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிடல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல் உடனேயே அனுமதி வழங்குவோம் என்றோ அல்லது, குறைந்த கட்டணம் செலுத்தினால், அனுமதி வழங்கத் தாமதமாக்குவோம் என்றோ கூறுகிறதா திமுக அரசு?
பொதுமக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை அல்ல. உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்
Edited by Siva