சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2024 (17:26 IST)

கர்நாடக அரசிடம் திமுக பணம் வாங்கிவிட்டதா என சந்தேகம்.! துரைமுருகனுக்கு அண்ணாமலை பதிலடி..!!

Annamalai
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசிடம் திமுக பணம் வாங்கிவிட்டதா என சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  போலீஸ் மீதான அச்சம் போய் விட்டதால், நாள்தோறும் 15 கொலை நடக்கிறது என்றும் தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு, போலீசாரின் கைகள் கட்டப்பட்டதே காரணம் என தெரிவித்த அண்ணாமலை, காவல் நிலையத்தில் போலீசார் வேலை செய்வதில்லை என்று புகார் கூறினார். 
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது தெளிவாகி உள்ளது என்றும் கொலை தொடர்பாக கேள்வி எழுப்பினால், அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா? அழுவதா? எனத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியதற்கு பதில் அளித்த அண்ணாமலை,    கர்நாடக அரசிடம் தி.மு.க. பணம் வாங்கிவிட்டதா என்பது எனது சந்தேகம் என்றும் இதுவரை கர்நாடகா காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தை கூட அவர்கள் விமர்சிக்கவில்லை என்றும் இதுவரை அறிக்கை விடவில்லை என்றும் கூறினார்.

 
கர்நாடகாவில் தி.மு.க.வினருக்கு தொழில் உள்ளதால், அதற்கு பாதிப்பு வரும் என அஞ்சி காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு செய்யும் தவறுகளை திமுக கேட்பதில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.