வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (12:06 IST)

’எனது பூத் வலிமையான பூத்’; அண்ணாமலையில் அரசியல் ப்ளான்!

Annamalai
நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் இப்போதே நாடாளுமன்ற தேர்தல் குறித்த பரபரப்புகள் எழ தொடங்கியுள்ளன.

சமீபத்தில் நடந்த அதிமுக 51வது ஆண்டு விழாவில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்று பேசியிருந்தார். அவரது கருத்தை வரவேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பேசியிருந்தார்.

தமிழ்நாட்டில் பாஜக மெல்ல வளர்ந்து வரும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழக பாஜகவுக்கு முக்கியமான மைல் கல்லாக உள்ளது. ஏற்கனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வென்றிருந்தாலும், நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.



ஏனென்றால் சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போதே தமிழகம் முழுவதும் ஒரு இடம் தவிர அனைத்து இடங்களையும் திமுக வென்றது. இந்த முறை திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் தேர்தல் பெரும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போதிருந்தே தேர்தலை குறிவைத்து நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.


இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “பாஜகவை அடி மட்டத்திலிருந்து வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்றிலிருந்து 60 நாட்களுக்கு பூத் அளவில் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னௌம் திட்டத்தையும் தொடங்க உள்ளோம்’ என கூறியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 4 பாஜக எம்.பிக்களையாவது தமிழகத்திலிருந்து அனுப்ப வேண்டும் என பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit By Prasanth.K