1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (11:18 IST)

அண்ணா பல்கலைகழக முறைகேடு வழக்கு - சிபிஐ கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைகழக வினாத்தாள் மறுகூட்டல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கடந்த 2017ம் ஆண்டு தேர்வு எழுதிய போது அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. 
 
அதாவது, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாடு அதிகாரியும், தற்போதையை ஐ.டி.துறை பேராசிரியையுமான உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து உமா உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் சஸ்பண்ட் செய்யப்பட்டனர். இந்த முறைகேட்டில் ரூ.600 கோடி வரை பணத்தை சுருட்டியதாக தெரிகிறது. 
 
இதனிடையே இந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையே முறையாக நடைபெற்று வருகிறது. ஆகவே இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என கூறப்பட்டது.
 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சிபிஐ விசாரணை கோரிய மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.