திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2025 (12:06 IST)

அண்ணா பல்கலை விவகாரம்.. பத்திரிகையாளர்களின் போன்களை பறிமுதல் செய்தது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பத்திரிகையாளரின் செல்போன்கள் பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது பக்கத்தில் மேலும் கூறியதாவது:

அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக செய்திகள் வருகின்றன. பத்திரிகையாளர்கள் போன்கள் பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனைப் பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.

உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ எனச் சந்தேகம் எழுகிறது. 'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற, முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்! 'யார் அந்த சார்' என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்

Edited by Mahendran