திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (11:05 IST)

திமுகவை முந்திய அதிமுக – தயாராகிறது தேர்தல் அறிக்கை !

இன்னும் கூட்டணி முடிவாகாத நிலையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளோடு ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதிமுக இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

ஆனால் பாமக, பாஜக மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இன்னும் கூட்டணியையே உறுதி செய்யாத நிலையில் இப்போது அதிரடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக அலுவலகத்தில் இதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ‘தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கலைஞர் இருந்தவரை திமுகதான் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிடும். அதன் பின்னரே அதிமுக தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படி நகலெடுத்து அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது என்றக் குற்றச்சாட்டுகளும் அடிக்கடி எழுந்துள்ளது. ஆனால் இம்முறை அதிமுக முந்திக்கொண்டு தனது தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறது. இன்னும் திமுக தரப்பில் இருந்து தேர்தல் அறிக்கைக் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.