1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (13:39 IST)

விவசாயிகளுக்கு பயனில்லாத பட்ஜெட்..! மேகதாது அணைக்கு எதிர்ப்பில்லை.!! இபிஎஸ்

EPS
தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பயனில்லாத பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், வேளாண்துறை அமைச்சர், அவர் சொந்த தொகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சரியாக இயங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
 
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய எடப்பாடி பழனிச்சாமி,  குருவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் திறக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
தென்னை விவசாயிகள் ஏமாற்றம்:
 
தென்னை பயிரிட்ட விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி குறிப்பிட்டதாகவும், தென்னையில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று தேர்தல் அறிவிப்பு கொடுத்ததாகவும், தற்போது வரை அதை நடைமுறை படுத்தவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார் 
 
சிலந்தி நோய் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று கூறினார்கள், அதையும் வழங்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்
 
திறந்தவெளி மைதானத்தில் நெல் மூட்டைகளை அடக்கி வைத்ததால்  பல லட்சம் நெல் மூட்டைகள் சேதமடைந்ததாகவும்,   இதனால் பெரும் பாதிப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி இருப்பதாகவும் எடப்பாடி தெரிவித்தார்.
 
காவேரி  குண்டாறு இணைப்பு திட்டம்: 
 
அதிமுக ஆட்சியில் காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாகவும்,  அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்ட இருப்பதாகவும் அவர் கூறினார்.
 
அதேபோல் காவேரி கோதாவரி ஆறு இணைப்பு திட்டமும் தற்போது வரை செயல்படுத்தவில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். காவேரி கோதாவரி ஆறு இணைப்புத் திட்டத்திற்கு பிற மாநிலங்கள்  சார்ந்த முதல்வர்களை மாநில அரசு சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
இயற்கை விவசாயத்திற்கு நிதி ஒதுக்கவில்லை:
 
மேலும் சிறுகுறு விவசாயிகளுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிப்பு இடம்பெறவில்லை எனவும் இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை  என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

 
கர்நாடக அரசு அணைக்கட்டப்படும் என்று அம்மாநில சட்டப்பேரவையில் அறிவித்து இருப்பதாகவும், அது குறித்து எந்த ஒரு  அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனவும் எடப்பாடி புகார் தெரிவித்தார்.