வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (13:36 IST)

கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி..! வைத்தீஸ்வரன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு.!!

EPS
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார்.   
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில்   பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.  இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். 
 
மேலும் இந்த கோயில் நோய் தீர்க்கும் ஸ்தலமாகவும், நவக்கிரகங்களில் முக்கிய ஒன்றான முக்கிய ஒன்றான செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. கோயிலில் உள்ள சித்தா மிருத தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை வழிபட்டால் 4 ஆயிரத்து 448 நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
 
Edapadii
இவ்வாறு சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை தந்திரம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு சுவாமிகள் , சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர் .
 
தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதர்சுவாமி, செல்வ முத்துக்குமாரசுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் ஆகிய சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.


மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக அமையவும், தேர்தலில் வெற்றி பெற வேண்டியும் எடப்பாடி சாமி தரிசனம் செய்ததாக சொல்லப்படுகிறது.